உணவுப் பாதுகாப்பு மசோதா – 2011

 

UNAVU-PAADHUKAPPUந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில், கடும் விமர்சனங்களுக்கு இடையே உணவுப் பாதுகாப்பு மசோதா-2011 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நடை முறைப்படுத்துவதற்க்கான சரியான வழிமுறைகளை கண்டறிவதற்கு முன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும் கோரியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன ?

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளவர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே உணவு பாதுகாப்பு சட்டமாகும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களானது நலத்திட்டங்களின் அடிப்படையிலானது அதாவது welfare based. ஆனால் இம்மசோதா மூலம் உரிமை அடிப்படையிலானதாக அதாவது rights based ஆக மாறுகிறது. அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டம் போல் நலத்திட்டங்களை அறிவிப்பதை போல் அல்லாமல் தேவைப்படும் மக்கள் அனைவருக்கும் உணவளிப்பது அரசின் கடமையாகிறது.  இந்தியாவின் மக்கள் தொகையில் 63.5% பேர் இம்மசோதா மூலம் பயன்பெறுவர். பெண்கள், குழந்தைகள், ஆதரவற்றோர், இயற்கை பேரழிவுக்கு ஆளானோர், பட்டினியால் வாடுபவர்கள் என அனைவரும் உணவு பெற சட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்படும் விதம்

நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி பொதுவிநியோக முறை மூலம் பயன்பெறுவோர் முன்னுரிமை பிரிவினர், பொதுப்பிரிவினர் என இரு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னுரிமைப்பிரிவினர் எனும் வறுமைகோட்டுக்கு கீழ் வரும் ஒவ்வொரு தனி மனிதனும் மாதம் ஒன்றுக்கு 7 கிலோ உணவுப்பொருட்கள்  அதாவது அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், சிறுதானியங்கள் கிலோ  ஒரு ரூபாய்க்கும்  பெறுவதற்கு உரிமை வழங்கப்படும்.

பொதுப்பிரிவு குடும்ப அட்டைதாரர்களில் ஒவ்வொரு நபரும் மாதம் ஒன்றுக்கு மூன்று கிலோ உணவுப் பொருட்களை  பெறுவார்கள்.

இதன் மூலம் கிராமப்புறங்களில் 75% பேரும் (இவர்களில்  46% பேர் முன்னுரிமை பிரிவினர் ), நகர்ப்புறங்களில் 50% பேரும் (இவர்களில் 28% பேர் முன்னுரிமை பிரிவினர்) மானிய விலையில் உணவுப்பொருட்களை பெறுவர்.

சர்ச்சைகள்

பொதுவாக எந்த ஒரு திட்டம் கொண்டுவரும்போதும்,  அதனை வரவேற்கும் அம்சங்களை காட்டிலும் சர்ச்சைகளும் ஏற்ப்படுவது போல் இத்திட்டத்திலும் உள்ளது.

  • முன்னுரிமை பிரிவினர், பொதுப்பிரிவினர் என இருவகையாக பிரிக்கப்பட்டிருந்தாலும் பயனாளிகள் யார் என்று அடையாளம் காட்டப்படவில்லை.
  • வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு மத்திய அரசு வைத்துள்ள சில கணக்கீடுகள் இந்த மசோதா புறக்கணிக்கிறது.
  • மத்திய அரசின் கணக்கீடு படி ஏழை குடும்பங்களின் எண்ணிக்கை 6.52 கோடி. இதுவே மாநில அரசுகளின் கணக்கீடு படி 11.03 கோடி . இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 56 சதவீதமாகும். ஆனால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் கிராமப்புறங்களில் 46%, நகர்புறத்தில் 28% என மசோதா கூறுகிறது. இது போன்ற குழப்பத்தால் மசோதாவின் பயன் அனைத்து ஏழை மக்களுக்கும் சென்றடையுமா என்ற சந்தேகம் எழுகின்றது.

தமிழக முதல்வரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பையே தெரிவித்துள்ளார். இம்மசோதா பற்றி அவர் பேசும்போது “கூட்டாட்சி அமைப்பில் மாநில அரசுகள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கின்றன. மக்களுக்கான நலத்திட்டங்களை வடிவமைத்து, அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பை மாநில அரசுகளிடமே விட்டு விடுவது நல்லது. மாநிலங்களில் திட்டங்களைச் செயல்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு எந்தத் தலையீடும் செய்யக் கூடாது” என கூறியுள்ளார்.

மத்திய அரசோ, மாநில அரசுகளோ யார் திட்டங்களை கொண்டுவந்தாலும் அதன் பயன் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளை களைந்து உணவு உற்பத்தியை பெருக்கி தன்னிறைவு பெற்றாலே இது போன்ற திட்டங்களுக்கு அவசியமே ஏற்ப்படாமல் போகும். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாடும் போது வல்லரசு கனவு காண்பது அபத்தம். இந்தியாவின் எதார்த்த நிலைக்கேற்ப அரசுகள் செயல் பட வேண்டும். ஏனெனில்….

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”

                                                                                                                  -பாரதியார்.

                                                                                                                                        -KUMARAN

You must be logged in to post a comment Login