அரசு மருத்துவமனைகளில் உடனடியாக 835 மருத்துவர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஏற்பட்டுள்ள 835 டாக்டர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும்  செவிலியர்களுக்கு மாதந் தோறும் ரூ.500 சிறப்பு படியாக வழங்குவதற்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; நலமான நாடே வளமான நாடாகும்.  மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு  அடித்தளமாக அமைவது மக்களின் ஆரோக்கியமாகும். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை அனைவரும்  பெற வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

இதன் முதல் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பில் சிறப்பு மருத்துவம் பயின்று முடித்த 416 சிறப்பு மருத்துவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி, 2011ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற பணி நியமன கலந்தாய்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களில் நியமிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்கள்.

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 437 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பப்பட்டன.  அந்த வகையில், ஏழை எளியவர் களுக்கு தரமான மருத்துவ சேவை தங்கு தடையின்றி கிடைக்கும் வண்ணம், புதிய ஆரம்ப  சுகாதார நிலையங்கள் திறக்கப் பட்டுள்ளதாலும்,   ஏற்கெனவே இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டதாலும்,   ஏற்கனவே ஒரு மருத்துவருடன் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு  கூடுதல் மருத்துவர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டதாலும்,  பணி ஓய்வு, பதவி உயர்வு, பணி துறப்பு ஆகியவற்றின் காரணமாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு  தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள், இளஞ்சிசு தீவிர சிகிச்சையகம் ஆகியவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள 835 மருத்துவர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பட்டியல் பெறப்பட்டு, இந்த மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும்  ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவ சேவை  வழங்கப்பட்டு வருகிறது.  இதற்காக ஒவ்வொரு ஆரம்ப

சுகாதார நிலையத்திலும் தனியாக மூன்று செவிலியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

தற்பொழுது அந்நிலையங்களில்  தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முதல் வருடத்தில் மாதம் ரூ.4,000/ம் இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.4,500/ம், மூன்றாம் வருடத்தில் மாதம் ரூ.5,500/ம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்குவதால் கிராமப்புற  மக்கள் மருத்துவ சேவைக்காக அதிக அளவில் அரசு சுகாதார மையங்களையே நாடி வருகின்றனர்.  எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில்  தொகுப்பு ஊதியத்தில்  பணியாற்றும்  செவிலியர்களுக்கு, அவர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு,  சிறப்புப்படியாக மாதந்தோறும் 500 ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேற்கூறிய அரசின் நடவடிக்கைகளினால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கப் பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login