சென்னையில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி
மரணம் அடைந்த கேரள கவர்னர் பரூக் மரைக்காயர் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுச்சேரி செல்லும் வழியில் சென்னை வந்த கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கேரள கவர்னர் பரூக் மரைக்காயர் மறைவு, கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவர் தனது 50 ஆண்டு பொதுநல சேவையில் முதல்-அமைச்சராக, மத்திய அமைச்சராக, ஆளுநராக இருந்து மக்கள் சேவை ஆற்றி உள்ளார்.
அவரது உடலை கேரளாவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முடிவு செய்தோம். ஆனால் கால அவகாசம் இல்லாததால் புதுச்சேரியில் நடக்கிறது. ஆனாலும் கேரளாவில் இன்று முழு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரளாவில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்.
தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது. முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட கசப்பு உணர்வு வேதனை அளிக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களின் வாழ்வாதாரம் உள்ளது என்பதை கேரளா நன்கு அறியும். இதற்காகத்தான் இரு மாநில ஒப்பந்தப்படி இதுவரை கேரள அரசு தடையின்றி தண்ணீர் வழங்கி வருகிறது. வருங்காலங்களிலும் ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்கப்படும்.
அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்புக்கும் கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களது கடமை. முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என நாங்கள் நம்புகிறோம்.





2664.00