மு க ஸ்டாலின் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

மு.க.ஸ்டாலின் மீது சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

சென்னை நகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல்.ஜெகன் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் இன்று ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த டிசம்பர் 2ஆம் தேதி வெளியான ஒரு மாலை பத்திரிகையில் முதல்-அமைச்சரைப் பற்றி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வெளியானது. அதில் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்ததாகவும் அதில் சிறுதாவூர் கொடநாடு பங்களா பினாமி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்- அமைச்சர் ஓய்வுக்காக சென்று தங்கி வருகிறார்.

இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சேஷாத்திரிகுமார் என்பவர் மு.க.ஸ்டாலின் மீது கொடுத்த நில மோசடி புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த புகாருக்கும் முதலமைச்சருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பொய் தகவல் என தெரிந்திருந்தும் முதலமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே அவதூறு பரப்பும் வகையில் பொய்யான புகார்களை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் அவதூறு பேட்டி கொடுத்துள்ளார். எனவே மு.க.ஸ்டாலினை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செயுங்கள்