கேரள மாநில ஆளுநர் பரூக் மரைக்காயர் மரணம்: கருணாநிதி இரங்கல்
பரூக் மரைக்காயர் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுதாபம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
1968-ம் ஆண்டு தி.மு.க. வில் இணைந்து தீவிரமாக கழகப்பணியாற்றி, 5 ஆண்டு காலம் புதுவை மாநில கழக முதல்-அமைச்சராக திறம்பட பணியாற்றியவரும், 1991-ம் ஆண்டு பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அரசில் சுற்றுலா மற்றும் விமானத்துறையில் இணை அமைச்சராகப் பணியாற்றியவரும், 2004-ம் ஆண்டு சவுதிஅரேபியாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவரும், 2010-ம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பணியாற்றியவரும், கடந்த செப்டம்பர் திங்கள் முதல் கேரள மாநில ஆளுநராகப்பணியாற்றி வந்தவருமான அருமை நண்பர் எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் சில நாட்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்து அதிலிருந்து மீளாமல் மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
பரூக், பழகுவதற்கு இனிமையானவர். எளிமையானவர். அவர் கழகத்திலே பணியாற்றிய காலத்திலும், பிறகு மத்திய அமைச்சராக பணியாற்றிய காலத்திலும் அடிக்கடி என்னைச் சந்திக்கக் கூடியவர்.
ஜார்க்கண்ட மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட போது கூட, என்னை இல்லத்திலே வந்து சந்தித்து அளவளாவி விட்டுத்தான் சென்றார். என்னிடம் தனி அன்பு கொண்டு பாசத்தோடு பழகி வந்த அருமை நண்பர் பரூக்கை இயற்கை இவ்வளவு விரைவில் பறித்துக் கொண்டு போய் விடு மென்று நான் எண்ணிட வில்லை. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.





2762.00