காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத் துறையை சேர்ந்த 1,686 பேருக்கு பதக்கம்: முதல்வர் அறிவிப்பு
காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் சிறப்பான பணி புரிந்த 1,686 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர்களுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை மாதாந்திர படி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2012 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழகக் காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் அதற்குச் சமமான பதவியில் உள்ளவர்கள் என மொத்தம் 1500 பேருக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம்’ வழங்கப்படும் என்றும், இப்பதக்கம் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 2012 பிப்ரவரி முதல் மாதாந்திரப்படியாக 100 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதேபோல தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணிபுரியும் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப் போர், தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர், தீயணைப்போர் மற்றும் அதற்கு சமமான பதவியில் உள்ளோர் என 120 பேருக்கு முதலமைச்சரின் தீயணைப்புத் துறைப் பதக்கம் வழங்கப்படும் என்றும், இப்பதக்கம் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 2012 பிப்ரவரி முதல் மாதாந்திரப்படியாக 100 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
தமிழகச் சிறைத் துறையில் பணிபுரியும் முதல்நிலை மற்றும் தரம் உயர்த்தப்பட்ட முதல்நிலை வார்டர்கள் 60 பேருக்குத் தமிழக முதலமைச்சரின் சிறைத் துறைச் சிறப்புப் பணிப்பதக்கம்’ வழங்கப்ப டும் என்றும், இப்பதக்கம் பெறும் ஒவ்வொருவருக்கும் 2012 பிப்ரவரி முதல் அவரவர் பதவிகளுக்கேற்ப மாதாந்திரப் படியாக 40 ரூபாய் மற்றும் 50 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் மாவட்டத் தலைநகரங்க ளில் பின்னர் நடை பெறவுள்ள அரசு விழாக்க ளில் பதக்கங்கள் வழங் கப்படும்.இவைமட்டுமல்லாமல், காவல் தொழில் நுட்பப் பிரிவு, காவல் படப் பிடிப்பாளர்கள் மற்றும் நாய் படைப் பிரிவு ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் தலா இருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 பேருக்குத் தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படும் என்றும், இப்பதக்கம் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் அவர்தம் பதவிகளுக்கேற்ப 3 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் ஒரு முறை மட்டும் ரொக்க விருதுத் தொகையாக அளிக்கப்படும் என்றும் இப்பதக்கங்கள் பின்னர் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.





2762.00