சென்னை ரெயில்வே காவல் நிலையங்கள் பிரிப்பு: கூடுதலாக நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
ரயில்வே காவல் நிலையங்களின் இன்றியமையாத் தன்மையை உணர்ந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரயில்வே காவல் நிலைய காவலர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும், சென்னை துரித ரயில் போக்குவரத்துக்கென்று இதுவரை பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை.
இதை கருத்தில் கொண்டு, மாவட்டங்கள் மற்றும் ஆணையரகங்களில் உள்ள சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் வகைப்பாடு செய்ததன் அடிப்படையிலும், ரயில் நிலையங்களின் எண்ணிக்கை, ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும் ரயில்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை, சுற்றுலா முக்கியத்துவம், விபத்து மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும், சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தில் உள்ள 19 காவல் நிலையங்களை மறுவகைப்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், 2 பெருநகர்-I வகை காவல் நிலையங்கள், 3 பெருநகர் II வகை காவல் நிலையங்கள், 4 உயர்வகை காவல் நிலையங்கள், 5 நடுத்தர வகை காவல் நிலையங்கள் மற்றும் 5 சிறிய வகை காவல் நிலை யங்கள் என 19 சென்னை மாவட்ட ரயில்வே காவல் நிலையங்களை மறுவகைப் படுத்தவும், இவ்வாறு மறுவகைப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக கூடுதலாக 10 ஆய்வாளர்கள், 45 சார் ஆய்வாளர்கள், 55 தலைமை காவலர்கள், 134 காவலர் கிரேடு I, 200 காவலர் கிரேடு II ஆகிய 444 கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அரசுக்கு 11 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 200 ரூபாய் செலவு ஏற்படும். இதேபோன்று, பெருமளவில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் வகையில், போக்குவரத்துத் துறையின் பணிகளை கணினிமயமாக்கல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், புதிய பகுதி அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களை உருவாக்குதல், போக்குவரத்துத் துறை அலுவலங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டுதல், ஒட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல் என பல்வேறு நடவடிக்கைளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில், கருர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் வட்டாரப் போக்குவரத்து பகுதி அலுவலகத்திற்கு, குளித்தலை தாலுகா, சத்தியமங்கலம் கிராமத்தில், போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான இடத்தில், 73 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் செலவில், பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் குளித்தலை, கடவூர், மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய வட்டங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த பயன் அடைவர்.





2664.00