சிவகங்கை, மணல்மேல்குடி, கோடியக்கரை : சுற்றுலா பயணிகள் வசதிக்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டை ஆண்ட சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் பல்வேறு மன்னர்கள் கலைநயத்துடன் கூடிய பல்வேறு திருக்கோவில்களை தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் அமைத்துள்ளனர். அவைகள் நம் நாட்டின் கலாச்சார சின்னங்களாக திகழ்கின்றன.
இக்கலைநயமிக்க திருக்கோவில்களை காண இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைப் புரிந்து வருகின்றனர். மேலும், ஆசியாவின் வளர்ச்சிக் கோட்டில் சிறந்த இடத்தில் தமிழ்நாடு உள்ளதால், பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர்.
சுற்றுலா வளர்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் அளித்து வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, திருக்கோவில்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதன்படி, சிவகங்கை மாவட்டம் திருமலையில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அங்கு வருகை தரும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், நவீன கழிப்பறை கட்டுவதற்காக 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய், பயணிகளை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கான நிழற்கூரை அமைப்பதற்காக 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய், பல்வகை பயன்பாட்டுக் கூடம் புதுப்பித்தலுக்காக 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய், மலைப்பாதையில் இரும்பு கைப்பிடிகள் அமைப்பதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தருவதற்காக 2 லட்சம் ரூபாய் என ஆக மொத்தம் 16 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கு நிதி ஒப்பளிப்பு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி கிராமம், கோடியக்கரையில் வருகை புரிகின்ற சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், கோடியக்கரையில் சுற்றுலா வரவேற்பு மையம், உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறை அமைப்பதற்காக 13 லட்சம் ரூபாய், காட்சி கோபுரம் அமைக்க 15 லட்சம் ரூபாய், சிறுவர் பூங்கா அமைக்க 10 லட்சம் ரூபாய், என மொத்தம் 38 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து, தங்குமிடம், குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், அவர்கள் பயணம் மேற்கொண்ட இடத்திற்கு மீண்டும் வருகை தரவும், அவர்களின் நல்ல அனுபவத்தை பிறருக்கு பகிர்வதும் சிறந்த விளம்பரமாக அமையும். இது, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகை செய்யும்.





2762.00