உலகதரத்தில் தமிழக காவல்துறை என்பதே லட்சியம் – ஜெயலலிதா
தமிழக காவல் துறையை உலகின் தலைசிறந்த காவல்துறையாக்க வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பயிற்சி சப்இன்ஸ்பெக்டர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடந்தது.இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு புதிய சப்இன்ஸ்பெக்டர்களின் பிரமாண்டமான அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: காவல் துறையில் பணிபுரியும் நீங்கள், சட்டத்தை நிலைநாட்டுவதில், மனித நேயத்துடன் பணிபுரியும் அதே நேரத்தில், மென்மையான அணுகுமுறை பயன்பெறாத இடத்தில் கடினமான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும். ஆனால், அந்த கடினமும் தேவையான அளவுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியகத்தின் மூலம், மனித நேயத்துடன் கூடிய அணுகுமுறையை நீங்கள் நிச்சயம் பெற்று இருப்பீர்கள். இன்றைய மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, நீங்கள் அனைவரும் கடமை உணர்ச்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். சட்டத்தை மதிக்கும் மக்களிடத்தில் நண்பனாகவும், இனிமையாகவும் பழக வேண்டும். அவர்களின் மதிப்பு மற்றும் மரியாதையை பெறும் வகையில், உங்களுடைய நடத்தை விளங்க வேண்டும்.
அ
தே சமயத்தில், வன் முறையாளர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் ஆகியோர் அஞ்சும் வகையில் அவர்களை இரும்புக்கரம் கொண்டு, அடக்க வேண்டும். இது போன்ற, பணி ஏற்பதற்கு முன் உள்ள பயிற்சிகளும், பணியிடை பயிற்சிகளும், காவலர்கள் அறிவுத்திறனில் சிறந்து விளங்கி, தங்கள் பணிகளை செம்மையுற செய்வதற்கு ஏதுவாக அமையும் என்றாலும்; காவல் துறை பணி சிறப்புடன் விளங்க காவல் துறை நவீனமயமாக்குதல் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
1991ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்தான், தமிழக காவல் துறையை நவீனமயமாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப் பட்டன. காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள், தளவாடங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், அதிரடிப்படை பயிற்சி, வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பிரிவு போன்ற புதிய பிரிவுகளை ஏற்படுத்துதல் என, பல்வேறு நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். இத்தகைய நடவடிக்கைகள் தான், காவல் துறைக்கு புதிய மாற்றத்தையும், அதன் காரணமாக சீர்மிகு ஏற்றத்தையும், அளித்து வருகிறது.
இன்றைக்கு நீங்கள் வெளிப்படுத்தி காட்டியுள்ள இந்த மிகச்சிறந்த அணிவகுப்பானது, உங்களது திறமை, மேன்மையான நோக்கம், உடல் மற்றும் மனத்திடம், ஆகியவற்றின் அடை யாள சின்னமாக விளங்குகிறது. விடா முயற்சி; பணியின்பால் கடமையுணர்ச்சி; கண்ணியம்; நேர்மை ஆகிய நற்பண்புகளை கடைபிடிப்போம் என்று நீங்கள் இன்றைய தினம் எடுத்துள்ள உறுதிமொழியை கடைபிடித்து; தமிழ்நாடு காவல் துறையின் திறமையை மேலும் உயர்த்த நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.
உங்களது பணிக்காலத்தில், சீருடை யின் கௌரவத்திற்கும், புகழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்; தமிழகக் காவல் துறையை உலகத்தின் தலை சிறந்த காவல் துறையாக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். கடமைப் பற்றோடு களமிறங்கி பணியாற்ற வல்ல சீர்மிகு ஆற்றலை பயிற்சி உதவி ஆய் வாளர்களுக்கு அளித்த, இந்தப் பயிற்சியகத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும், அலுவலர்களையும் மனதார பாராட்டுகிறேன். கடமை இருந்தால் வீரனாகலாம்; பொறுமையிருந்தால் மனிதனாக லாம் என்ற எம்.ஜி.ஆரின் பாடலுக்கேற்ப உங்கள் பணி அமைய வேண்டும் என்று சொல்லி, உங்கள் எதிர்காலம் சிறந்து விளங்க, எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.





2762.00